குடாநாட்டிற்கு 2 நாள் விஜயம்

யாழ்க் குடாநாட்டிற்கு 2 நாள்  விஜயம் மேற்கொள்ளவிருந்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் றொபேட் ஓ பிளக்கின் பயணம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு டிப்பூட்டி சீப் ஒப் மிசன் (deputy chief of mission)  தரத்திலான அதிகாரியே அங்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

குடாநாட்டிற்கான அவசர மருத்துவ வசதிகள் எனும் திட்டத்தின் கீழ் யுஎஸ் எயிட் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளால் யாழ் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக றொபேட் ஓ பிளக் நாளைய தினம் யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். அப்பயணத்திற்கான முன்னேற்பாடாக யாழ்ப்பாணம் இன்று செல்லும் அவர் நாளைய தினம் புதன்கிழமை இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் பதிலாக தூதரகத்தின் பிரதி அதிகாரி  (deputy chief of mission)  ஜேம்ஸ் ஆர் மூர் மற்றும் அலசியல் பிரிவு அதிகாரி ( political officer )  மெக் டெடர் ஆகியோரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

கொழும்பில் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி எனும் அமைப்பினால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதா என்பது பற்றி தகவல்கள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதரக பிரதிநிதிகள்  இன்று மாலை யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் துறவிகளைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.  வன்னிப் பெரு நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் மற்றும் யாழ்க்குடாநாட்டில் ஏற்பட்டுள்ள ராணுவ நெருக்குவாரம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதாக ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் யாழ்க் குடாநாட்டிலுள்ள உதயன் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். கடந்த 2 வருடங்களாக காவற்துறைப் பாதுகாப்புடன் இயங்கி வருகின்ற உதயன் அலுவலகத்தில் ஆசிரியர் பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

உதயன் பத்திகையின் ஆசிரியரான கானமயில்நாதன் மற்றும் செய்தி ஆசிரியரான குகநாதன் ஆகிய இருவரும் கடந்த 2 வருட காலமாக வெளியே செல்லாது குறித்த அலுவலகங்களிலேயே தங்கியிருந்து நெருக்குவாரங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றுகின்ற நிலையில்  சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதனிடையே நாளைய தினம் இடம்பெறவுள்ள பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள சுகாதார கிராமம் திறப்பு விழாவில் இவர்கள் கலந்து கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டிற்கான ஓ பிளாக்கின் பயணம் தொடர்பாக குடாநாட்டிற்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டமை பலத்த ஏமாற்றததை ஏற்படுத்தியுள்ளது.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009