ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் நிலவரம்

 

விடுதலைப் புலிகளை இராணுவம் மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கி விட்டதாகவும், அந்த பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதாகவும் படைத்தரப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. எனவே தென்னிலங்கை சிங்கள மக்கள் தொடக்கம் அனைத்துலக சமூகம் வரையிலும் இறுதிப்போரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் இறுதிப்போரை விடுதலைப்புலிகள் எங்கு இருந்து ஆரம்பிப்பார்கள்? பெரும்பாலான படைத்துறை அதிகாரிகள் இறுதி போர் கிளிநொச்சியில் நடக்கலாம் என எதிர்பார்த்தனர், பின்னர் முல்லைத்தீவில் நிகழலாம் என கூறினர். அதன் பின்னர் சாலைப் பகுதியில் என கணிப்பிட்டனர். ஆனால் எதுவும் நிகழவில்லை. முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஆனால் தென்னிலங்கை பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தின் ஆய்வுகள் எல்லாம் தவறாகி போனது எதனால்? அவர்கள் விடுதலைப்புலிகளை சாதாரண இராணுவமாக கணிப்பிட்டது தான் அதற்கான காரணம். பொதுவாக இராணுவ உத்திகளில் எதிர்த்தரப்பு பலம் பொருந்திய நிலையில் இருக்கும் போது மறு தரப்பு தப்பி செல்லும் உத்திகளுடன் கூடிய பின்தளத்தையே பேண முற்படும். அதற்கு ஏற்ற இடங்கள் சாலையும், முல்லைத்தீவும் தான். எனவே தான் அதனை விடுதலைப்புலிகளின் இறுதி சமர்க்களங்களாக அரசு கணிப்பிட்டிருந்தது.
எனினும் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் இருந்து வெளியேறியது அகில உலகத்தையும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியிருந்தது. அவர்கள் அங்கு தமது ஆயுதக்களஞ்சியங்களையும், படையணிகளையும் வைத்திருப்பார்கள் என படைத்தரப்பும் நம்பியது. ஆனால் விடுதலைப்புலிகளை சாதாரண இராணுவத்துடன் ஒப்பிட முடியாது. அவர்களின் உளவுரனும், போரிடும் நுட்பமும் அலாதியானவை.
1996 ஆம் ஆண்டு வரை சிறீலங்கா இராணுவம் முகாம் அமைத்து இருந்து இடம் முல்லைத்தீவு. அதன் பூகோள அமைப்பு சிறீலங்கா இராணுவத்திற்கு நன்கு பரீட்சயமானது. எனவே அங்கு கனரக ஆயுதங்களையும், படையணிகளையும் தக்கவைத்து இறுதி போரை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் எண்ணியிருப்பார்கள் என சிறீலங்கா இராணுவம் எண்ணிணால் அது அவர்களின் முட்டாள்த்தனம்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வு கட்டமைப்பு உலகின் மிகச்சிறந்த புலனாய்வு கட்டமைப்புக்களில் ஒன்று. அது அனைத்துலக படைத்துறை ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அவர்கள் படைத்தரப்பின் உத்திகளை முன்கூட்டியே அறிந்து கொண்டதுடன், முல்லைத்தீவை தமது பிரதான தளமாகவும், சாலையை கடற்புலிகளின் பிரதான தளமாகவும் எல்லோரையும் நம்ப வைத்திருந்தனர். ஆனால் படைத்தரப்பு அவற்றை கைப்பற்றிய போது அங்கு எதுவும் இருக்கவில்லை.
படைத்தரப்பு இறுதி நகர்வுக்கு தற்போது தயாராகி வருகின்ற போது விடுதலைப்புலிகள் தமது தாக்குதல் களமாக புதுக்குடியிருப்பை தெரிவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தொடர்பான செய்மதி புகைப்படங்களை அவதானிக்கும் போது மேலும் சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும். மக்கள் குடியிருப்புக்களை கொண்ட அந்த கிராமம் கடலுடன் நேரடியான தொடர்புகளை கொண்டது. ஊடகங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்புற சண்டைக்கு மாறப்போகின்றனர் என ஆருடம் கூறுகின்ற போதும், யதார்த்தம் மாறுபட்டது. ஏனெனில் புதுக்குடியிருப்பை ஊடறுத்து செல்லும் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தெற்குப்புறம் தான் அதிக காடுகளை கொண்ட பிரதேசம் உள்ளது. கிழக்குப்புறம் சிறிய காடுகளும் குடியிருப்புக்களுமே அதிகம்.
தற்போது இராணுவம் ஏ-35 சாலைக்கு தெற்குபுறமே நிலைகொண்டுள்ளது. அதாவது காட்டுப்பகுதிக்குள் அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே விடுதலைப்புலிகளின் இறுதித்தாக்குதல் காட்டுப்புறச்சமாரக இல்லாது கிராமப்புற சமராக இருக்கலாம் என்பது தற்போது எழுந்துள்ள ஊகம். இராணுவம் காட்டு பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா படைத்தரப்பு தினமும் 10 தொடக்கம் 20 விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றி வருவதாக தெரிவித்து வருகின்றது. எனினும் அது தொடர்பான புகைப்படங்களை தற்போது அவை வெளியிடுவதில்லை. அவர்கள் உடைந்த கட்டடங்களையும், கைவிடப்பட்ட எண்ணை பரல்களையும், கைவிடப்பட்ட பொருட்களையுமே காட்டுகின்றனர். வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் 40 தொடக்கம் 50 சடலங்களையே வைக்க முடியும். நீதிமன்னறத்தின் அனுமதியின்றி சடலங்களை அடக்கம் செய்யவும் முடியாது. இரண்டு தடவைகளில் 70 சடலங்களே அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே படையினரின் தகவல்கள் தவறானவை.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.
முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள் தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு. எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன.
ஆனால் விடுதலைப்புலிகள் இராணுவத்திற்கு காட்டுப்புற பகுதிகளை விட்டுவிட்டு நகர்ப்புற பகுதிக்கு நகர்ந்துள்ளனர். இராணுவம் புதுக்குடியிருப்பின் மேற்கிலும், தெற்கிலுமாக காட்டுப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகள் காட்டுப்புற பகுதியில் நிலையெடுக்க போகின்றனர் என தெரிவித்து வந்த நிலையில் அதற்கு மறுதலையான களமுனை மாற்றம் அங்கு நிகழ்ந்துள்ளது. அதாவது இராணுவத்திற்கு காட்டுப்புற பகுதிகளையே அவர்கள் விட்டு வைத்துள்ளனர். அதன் காரணம் என்ன?
இராணுவ உத்திகளில் விடுதலைப்புலிகள் தரமான அனுபவங்களை கொண்டவர்கள். அவர்கள் முல்லைத்தீவிலும் சாலையிலும் நிலைகொள்ள போவதாக அனைத்து உலகின் படைத்துறை நிபுணர்களை எல்லாம் நம்பவைத்துவிட்டு அதற்கு மறுதலையான களமுனையை தெரிவு செய்துள்ளனர். சிறீலங்கா இராணுவத்திற்கு காட்டுப்புற தற்காப்பு சமர் அனுபவம் குறைவு. அதாவது காட்டுப்புற தற்காப்பு சமருக்கு பழக்கமற்ற இராணுவம் தற்போது காட்டுப்பகுதியில் நிலையெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இது சிறீலங்கா இராணுவத்திற்கான மரணப்பொறி.
காட்டுப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தப்போகின்றனர். அதற்கான ஆரம்பமே கடந்த 1 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் நிலைகொண்டிருந்த 59 ஆவது படையணிக்கு ஏற்பட்ட அனுபவம். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இராணுவத்திற்கு வான்படை அதிக உதவிகளை வழங்க முடியாது.
காட்டுப்பகுதியில் உள்ள தமது தளங்களுக்கு இராணுவம் ஆயுதங்களை தருவிக்கும் போதும் விடுதலைப்புலிகள் அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நிகழ்த்தலாம். காட்டுக்குள் ஊடுருவி தாக்கும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளினால் இராணுவம் அதிக அச்சங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன்;, அவர்களின் உளவுரனும் பாதிப்படையலாம். ஆழமான காட்டுப்பகுதிகளில் வினியோகங்களை பேணுவதும் படைத்தரப்பிற்கு கடினமானது.
இந்த உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகளுக்கு போதிய படைபலம் உண்டா? விடுதலைப்புலிகள் வசம் 1000 போராளிகள் உள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அது தவறான தகவல் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனெனில் 1000 பேர் 7 டிவிசன் படையணிகளை பல முனைகளில் எதிர்த்து ஒரு நாள் கூட சமர் புரிய முடியாது. முன்னர் 15,000 சதுர கி.மீ பரப்பினை சில ஆயிரம் போராளிகளை கொண்டு அவர்கள் தக்கவைத்திருந்திருக்கவும் முடியாது.
வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகள் எந்த அச்சமும் இன்றி தமது கடமைகளை செய்து வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. நிலப்பரப்புக்களை இழந்ததை தவிர வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெருக்கடிகளின் நிலையை கூட தாம் இன்னும் எட்டவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். போராளிகளின் முகங்களிலும் பதட்டம் தென்படவில்லை. எனவே அவர்கள் உறுதியாக உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30,000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15,000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45,000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும், கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு படையையும், தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.
புதுக்குடியிருப்பு களமுனையில் இராணுவத்திற்கு பல அதிhச்சிகள் காத்திருக்கின்றன. இறுதிப் போர் என்பது அரசு எதிர்பார்ப்பது போல இருக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடுபவர்கள். அவர்கள் சாவதற்கு அஞ்சுவதில்லை. எப்போதும் சாவிற்கள் வாழ்பவர்கள். ஆனால் சிங்கள சிப்பாய்கள் அவ்வாறனவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் சம்பளத்திற்காக படையில் சோந்தவர்களே அதிகம். அவர்கள் ஒரு போதும் சாக துணிவதில்லை. களமுனைகள் பாதகமானால் முதலில் தப்பி ஓடவே எத்தனிப்பார்கள்.
கொள்கை ரீதியாக பார்த்தால் ஒரு படை சிப்பாய் கொல்லப்படும் போது இரு படை சிப்பாய்கள் காயமடைகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிப்பாய் படையை விட்டு தப்பியோடுவது யதார்த்தமானது. அதாவது 1000 சிப்பாய்கள் கொல்லப்படும் போது 2000 சிப்பாய்கள் காயமடைவதுடன், 1000 சிப்பாய்கள் படையை விட்டு தப்பியோடும் நிகழ்தகவும் உண்டு. அவ்வாறு பார்த்தால் 8,000 பேர் கொண்ட டிவிசனின் பலம் ஒரு ஊடறுப்பு தாக்குதலுடன் 4,000 ஆக குறைந்துவிடும். அதாவது 50 விகித வீழ்ச்சி. தனது பலத்தில் 50 விகிதத்தால் வீழச்சி காணும் எந்த டிவிசனும் மீண்டும் ஒரு பாரிய சமரை எதிர்கொள்ள துணியாது என்பதுடன் அதனை வெற்றி கொள்வதும் இலகுவானது. அதாவது முழு டிவிசனும் செயலிழந்ததாகவே கொள்ளப்படும்.
விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு தாக்குதலின் போது ஒவ்வொரு டிவிசனும் 1000 சிப்பாய்களை இழக்குமானால் அது இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதுடன் போரும் முடிவுக்கு வந்ததாகவே கொள்ளப்படும். அரசு கூறுவது போல விடுதலைப்புலிகளின் பலம் 1000 மட்டுமே எனில் இது சாத்தியமற்றது. ஆனால் அவர்களின் பலம் 45,000 எனில் இராணுவம் பேரழிவை சந்திப்பது தவிர்க்க முடியாதது.
எனவே இந்த சமர் ஈழப்போரில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் சமராகும். அனைத்துலகத்திலும் சிறீலங்கா தொடர்பான கருத்துக்கள் மாற்றமடைந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில் அவை மேலும் மாற்றமடையலாம். இந்த போர் மேலும் சில மாதங்கள் இழுபட்டு சென்றால் அனைத்துலகத்தின் போக்கில் பல மாற்றங்கள் நிகழலாம். எனவே அனைத்துலகத்தின் ஆதரவுகளை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து திரட்டும் போது விடுதலைப்புலிகள் பாரிய படைத்துறை வெற்றி ஒன்றை அடையக்கூடும். இது உண்மையானால் எதிர்வரும் சமர் ஈழப்போர் வரலாற்றின் திருப்புமுனை சமராகும். 
நிலவரம் 

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009