தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு

தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு

 sankathi_pic_ofthe_day
எமது தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற தமிழீழக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.


நிறங்களும் குறிக்கோள்களும்


எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.
விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.
 

தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும் 

பொதுக்கொடி 4‘ x 6‘


விடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.

உள்ளிடக்கொடி 3‘ x 5‘

அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.

எழுச்சிக்கொடி 2‘ x 3‘

 
பொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.

வீட்டுக்கொடி 2‘ x 3‘

தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.

அணிவகுப்புக்கொடி 2‘ x 3‘

அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.
.
கொடியேற்றும் முறை


தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும். 

கொடியின்பார்வை 

கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும். 

தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்


கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.
மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.
தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.
தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.
கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டு

LAYAM

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009